முடிவெட்டும் ராசு (ஒடுக்கப்பட்ட மனிதர்களின் உண்மையானா வாழ்க்கை கதை )

1988 களில் ஊர்ல முடிவெட்டும் தொழிலை ராசு  என்பவரும் அவனது மகனும் குலத்தொழிலாக செய்து கொண்டு இருந்தார்கள். அப்பொழுதெல்லாம்  முடி திருத்தும் வேலை  என்கிற வார்த்தையே கிடையாது,முடி வெட்டுதல் என்ற வார்த்தை மட்டுமே பழக்கத்தில் இருந்த காலம். ஊரில் உள்ள அனைத்து மேல் ஜாதி ஆம்பளைகளும்,அவர்களது புள்ளைகளும் என்னதான் பஞ்சு மெத்தைல உருண்டு புரண்டாலும்,முடிவெட்ட வேண்டும் என்றால்  கம்மா கரையில் அமர்ந்து தான் முடிவெட்ட வேண்டும். ஊருக்கு ஒதுக்கு புறத்தில் ஊருக்கு சொந்தமான மிகப்பெரிய கண்மாய் உள்ளது. சுற்றிலும் கரை எழுப்பபட்டு காவலுக்கு ஒரு அய்யனர் கோவில் இருக்கும். கரை எங்கும் பல தலைமுறை கண்ட புளிய மரங்கள் ஒய்யாரமா வளர்ந்து கம்மா கரைக்கு குடையாக தனது கிளைகளை பரப்பி ஆழ்ந்த தியானத்தில் உள்ள முனிவரை போல அமைதியாக நின்றுகொண்டு இருக்கும்.

அந்த கம்ம கரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புளிய மரங்கள் இருந்தாலும் ,பல வருடமாக காய் சரியாக காய்க்காத ஒரே ஒரு புளிய மரம் ஒன்று கரை ஆரம்பிக்கும் இடத்தில் உள்ளது. அந்த ஒரு புளியமரம் மட்டும் தனியாக இருக்கும்,மற்ற புளியமரங்கள் அனைத்தும் தோப்பாக ஒன்றுடன் ஒன்று உரசியவாறு இருக்கும். இந்த தனிமை மரத்திற்கும் மற்ற மரத்திற்கும் உள்ள இடைவெளிதான் கண்மாய்க்கு உள்ளே செல்லும் பாதை .ஒரு வேலை இந்த பாதையில் முன்னொரு காலத்தில் புளியமரம் ஒன்று இருந்திருக்கலாம்,அதை வெட்டி எரிந்து விட்டு அங்கு ஊர்  மக்கள் பாதையை அமைத்து இருக்கலாம், அதனால் தான் என்னவோ தன்னுடன் உறவாட,உரசியாட இருந்த ஜோடியை காணவில்லை என்றும், தான் தனிமைப்படுத்தபட்ட கவலையில் என்னவோ அந்த மரம் மற்ற மரங்களை போல காய் காய்ப்பது இல்லை, தனது கிளைகளை விரிவுபடுத்துவதும் இல்லை. காய்ந்து , மெலிந்து, மேலும் நோயுற்ற யானையை போல் அழகை இழந்து நின்று கொண்டிருந்தது.

அந்த ஒத்த தனிமை மரத்தின் மேல் உள்ள பரிதாபமோ, இல்லை இந்த ஊரில்  தன்னை போல் ஒதுக்கி வைக்கப்பட்ட மற்றுமொரு  ஜீவன் என்கிற பாசமா என்று தெரியவில்லை , முடிவெட்டும் ராசு அந்த தனிமை மரத்தின் கீழ் அமர்ந்து தான் தனது முடி திருத்தும் வேலையை செய்வார். ஒரு சவரகத்தி, ஒரு பாலிஷு கல்லு, தண்ணி ஊற்றி வைக்க ஒரு தேங்காய் செரட்டை ,   கைத்தடம் படும் அளவுக்கு உபயோகித்த கத்திரி, பெரும்பாலான பற்கள்  கொட்டிப்போய்  பொக்க வாய் போல காட்சி அளிக்கும்   ஒரு சீப்பு,பாதரசம் உருகிதான் விட்டதோ என்னவோ தெரியவில்லை அங்கும் இங்கும் மட்டுமே முகம் தெரியும் ஒரு  கண்ணாடி, மேல் ஜாதி மக்கள் மட்டும் அமர சிறிய பலகை , இது தான் அவரின் தொழில் சார்ந்த சொத்துக்கள் .

சட்டைத் துணியை தன் வாழ்நாளில் காணாத கன்னங்கரேர் என்ற மேல்பகுதி, சாம்பல் நிறத்தில் ஒரு கால்ச்சட்டை,  ஒல்லியான மேலும்  எலும்பும் தோலும் இருக்கமாக ஒட்டிப்போன தேகம்,மெலிந்த கன்னங்கள், நல்ல வளர்த்தி இதுதான் ராசுவின் அடையாளம். காலை சுமார் ஆறு மணி முதல் பத்து மணிவரை மேலும் மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை அந்த புளிய மரத்தின் கீழே தான் அமர்ந்து தனது தொழிலை செய்து கொண்டு இருப்பார்.

எப்பொழுதும் இரண்டு பேராவது முடி வெட்டுவதற்கு வரிசையில் அந்த கம்மா கரையில் அமர்ந்து கொண்டிருப்பார்கள், பக்கத்து ஊர்காரங்களும் முடிவெட்ட ராசுவிடம் தான் வந்து ஆக வேண்டும்.  ராசு வெட்டுன மண்டைக்கு அவர்  ஒரு ரூபானு கூலி வச்சிருந்தா கூட அவர் சின்னதாக ஒரு புது  வீடு கட்டி இருப்பார், ஆனால் அன்று அந்த ஊர்ல நிலைமை அப்படி இல்லை. முடிவெட்டும் எவரும் ராசுவுக்கு கூலி கொடுப்பதில்லை அதற்கு மாறாக தினமும் இரவு ஒரு கை   அரிசி சாதமும் , ஒரு கரண்டி குழம்பும் மட்டும் தான்   கொடுப்பார்கள். இரண்டு பெரிய அலுமினிய சட்டியை எடுத்துக்கொண்டு இரவு ஒரு எட்டு மணியை போல ராசு ஊருக்குள் மேல் ஜாதி உள்ள பகுதிக்குள் ஒவ்வொரு வீடாக சென்று சோற்றையும், குழம்பையும் வாங்கி  கொண்டு செல்வார். அனைத்து வீட்டு  குழம்பும் ஒரே பாத்திரத்தில் தான் வாங்குவார். ஒரு வீட்டில் சாம்பார்,வேறு ஒரு வீட்டில் ரசம்,மற்றுமொரு வீட்டில் புளிக் குழம்பு அல்லது பருப்பு என்று அனைத்தும் கலந்து உள்ள அந்த குழம்பின் பெயரையும்  ருசியையம்  ராசுவும் அவரது குடும்பத்தாரும் மட்டுமே அறிவர்.மூன்று வேலையும் நேற்று இரவு வாங்கின சாப்பாடுதான் அவர்களுக்கு உணவு.

என்றாவது நல்லநாள் அதாவது தீபாவளி , பொங்கல் போன்ற நாட்களில் மட்டும் ஒவ்வொரு வீட்டிலேயும் காலை இரண்டு இட்லியும், மதியம் ஒரு கரண்டி கறிக் குழம்பும் வாங்கிக் கொள்ளலாம்,அதை தவிர்த்து மற்ற நாட்களில் முன் சொன்னதை போன்று இரவு சாப்பாடு மட்டும் தான். பக்கத்து ஊர் கார்களும் , அந்த ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் முடி வெட்டுவதற்கான கூலியாக குறுகிய தொகையாக இரண்டு ரூபாய் கொடுப்பார்கள்,அதை வைத்து தான் உணவை தவிர்த்து மற்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளவேண்டும் . ஊரில் ஏதாவது  இறப்பு போன்ற சம்பவங்கள் நடந்தால் அதற்கான  ஒரு சில இறுதி சடங்கு வேலைகளை குறிப்பாக தாடையில்,காலில் துணி கட்டுவது, பிணத்தை குளிப்பாட்டுவது, பாடை தயார் செய்யும்  நபர்களுக்கு உதவி புரிவது, போன்ற ஈம சடங்கு வேலைகளை அவர் தான் செய்தாக வேண்டும், ஆனால் அன்று மட்டும் அந்த மேல் ஜாதிக்கார்கள் புண்ணியவனாக மாறி தங்களது தகுதிக்கு ஏற்ப பணத்தை மன விசாலத்துடன் குடுத்து விடுவார்கள். சாவுகளில் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்கிற ஒரு பொழப்பு ராசுவுக்கு . ஆனால் இந்த சமுதாயத்தில் இந்த மாதிரி உள்ள ஏற்ற தாழ்வை எண்ணி அவர் ஒரு நாளும் கவலையோ ,வருத்தமோ பட்டது மாதிரி தெரியவில்லை,சிந்திக்கவாவது செய்திருப்பாரா என்பது கூட சந்தேகம் தான்.ஏனெனில் பல தலைமுறைகளாய் ஒரே மாதிரியானா வாழ்கை வாழ்ந்து அவர்களுக்கு பழகிவிட்டது, அவர்களின் உலகம் அவ்வளவு தான். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் ராசு சந்தோஷமாகத்தான் இருந்தார். எப்படி சந்தோசமாக இருந்தார் என்ற கேள்விக்கு ராசுவுக்கு மட்டுமே விடை தெரியும்.

— அரவிந்த் பால்பாண்டி

One comment

Leave a comment