திருந்தாத ஜென்மங்கள்

வேசபுரம் என்னும் ஒரு சிறிய கிராமம் ஒன்று தென் தமிழகத்தின் ஒரு மூலையில்  இருந்தது.அங்கு வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் படித்தவர்கள் குறிப்பாக அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள். வேசபுரம் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்கள் யாவும் பெரும்பாலும் படிக்காதவர்கள் , வெள்ளந்தி மனசு உள்ளவர்கள்  மேலும் விவசாயம் மற்றும் ஆடு , மாடுகளை நம்பி வாழ்ந்து வந்தார்கள் . வேசபுரத்தை தவிர சுற்றி உள்ள அத்தனை கிராமத்திலும் மழை தண்ணிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை ஆனால் வேசபுரத்தில் மட்டும் கடந்த இருபது ஆண்டுகளாக ஒரே தண்ணி பஞ்சம், சொல்லி வைத்தால் போல வேசபுரத்தில் மட்டும் மழை பெய்வதில்லை.வானம் பொய்த்து போகவே அந்த ஊரே நிலத்தடி நீரை நம்பித்தான் காலத்தை கடத்திவந்தது . வேசபுரத்து மக்களிடம் பணவசதி இருந்ததால் அவர்கள் எதை பற்றியும் கவலைப் படுவதில்லை .ஆளாளுக்கு  வீட்டிலே ஆழ்துளை குழாய் போட்டுகொண்டு தங்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொண்டனர் .

மழை எதனால் தங்களது கிராமத்தில் சரிவர பெய்வதில்லை என்று அவர்களுக்கு எந்த யோசனையும் கிடையாது மேலும் அதை எப்படி சரி செய்யலாம் என்கிற சிந்தனை துளிகூட இல்லை. ஈ , காக்க,குருவி,நாய் என மனிதர்களை சார்ந்து வாழும் எந்த உயிரினமும் அந்த ஊரில் இல்லை,அனைத்தும் என்றோ வேசபுரத்தை விட்டுபுட்டு  பக்கத்து கிராமத்திற்கு சென்று தஞ்சம் அடைந்துவிட்டது. பக்கத்து  கிராம மக்கள் அனைவரும் வேசபுரத்து கிராமத்தின் நிலைமையை பார்த்து கவலைப்பட்டார்கள் .ஆனால் வேசபுரத்து மக்கள்  அதை பொருட்படுத்தவில்லை. காலம் கடக்க கடக்க நிலத்தடி நீரும் வற்ற ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் ஆழ்துளை குழாய்களில் இருந்து வெறும் காற்று மட்டும் தான் வந்தது , தண்ணீருக்கு என்ன செய்வது என்று அறியாமல் வேசபுரத்து மக்கள் கவலையடைந்தார்கள் . மீண்டும் தங்களது பண பலத்தை வைத்து குடிக்க முதல் குண்டி கழுவுற வரைக்கும் தண்ணீரை பக்கத்து நகரத்தில்  இருந்து வாங்கி பார்த்தார்கள் ஆனால் எத்தனை நாளைக்கு இப்படி தண்ணீரை  விலைக்கு வாங்கி அல்லல் பட முடியும்.

ஒரு கட்டத்தில் வேசபுரா மக்களுக்கு தோல்வியை ஒப்புக்கொள்வதை தவிர வேற வழி  இல்லை, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது ஒன்று இந்த வீடு வாசலை விட்டுபுட்டு சொந்த ஊரை காலி செய்துவிட்டு தண்ணீர் வசதி உள்ள ஊருக்கு இடம் மாறுவது , இல்லை கடவுளிடம் மன்றாடுவது என்ற இரண்டே வாய்ப்புகள் தான் அவர்களுக்கு எஞ்சி இருந்தது.

எப்படி இந்த பிரச்சனையை சமாளிப்பது என்று ஒருநாள் ஊர் மக்கள் ஒன்று கூடி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். அப்பொழுது ஊர் பெரியவர் ஒருவர் ஒரு தகவல் சொன்னார் அது என்னவென்றால்  பாபநாசம் அருகில் உள்ள நல்லூர் என்னும் மலை கிராமத்தில் ஒரு சக்தி வாய்ந்த முற்றும் துறந்த முனிவர் இருப்பதாகவும் அவருக்கு நல்லது கெட்டதை முன்கூட்டியே அறியும் சக்தி உள்ளதாகவும் மேலும் யார் எந்த பிரச்சனைக்கு சென்று அவரை பார்த்தாலும் அந்த பிரச்சனை தீர்வதற்கான  பரிகாரத்தை கூறுவார் என்றும் அதனால் அவரை சந்தித்து நமது பிரச்சனையை சொன்னால் ஏதாவது ஒரு வழி  கிடைக்கும் என்றும்  கூறினார். வேற வழி ஏதுவும்  இல்லாததால் ஊர் மக்கள் அந்த பெரியவரின் பேச்சுக்கு தலைசாய்த்தார்கள் .

மறுநாளே ஊரில் உள்ள சில பெருசுங்க ஒன்று கூடி ஊரில் உள்ள அனைவரின் சார்பாக அந்த முனிவரை பார்க்க சென்றார்கள். அந்த முனிவர் ஒரு ஓடையின் அருகில் உள்ள ஒரு சிறிய மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு அந்த ஓடையையும் அதன் சத்தத்தையும் அமைதியாக கேட்டுக்  கொண்டிருந்தார். சாமி…. என்று ஒருமித்த குரலில்  சுமார் பத்து நபர்கள் ஒன்றாக அழைத்து அந்த நிமிடத்தின் அமைதியை கலைக்கவே சாமி அவர்களை திரும்பி பார்த்தார்.

என்ன வேண்டும் என்று பார்ப்பதுபோல எல்லாம் அறிந்த அந்த முனிவர்  வேசபுரத்து மக்களை பார்த்து கேட்டார். ஊர் மக்கள் தங்களது தண்ணீர் பிரச்சனையையும்  மேலும் மழை பெய்து பல வருடங்கள் ஆகின்றது என்றும் கூறினார்கள். அனைத்தையும் பொறுமையக கேட்டுக்கொண்ட அந்த முனிவர் ஒரே ஒரு தகவல் சொன்னார் அது என்னவென்றால் அந்த முனிவர் அந்த ஊருக்கு வருவதாகவும் பின்பு அங்கு உள்ள மக்கள் அனைவரையும் பார்த்து அதற்கான பரிகாரம் என்னவென்று சொல்வதாகவும் அவர் கூறினார். சரிங்க சாமி என்று ஊர் மக்கள் அவரின் கட்டளைக்கு ஆமோதித்து அவர்களுடன் சாமியையும் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

வேசபுரம் சென்றடைந்த முனிவர் ஊர் மக்கள் அனைவரையும் ஊரில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஊர் மக்கள் அனைவரும் முனிவரின் கட்டளைக்கு இணங்க காளியம்மன் கோவிலுக்கு முன்னே வந்து அமர்ந்தார்கள். முனிவர் என்ன சொல்லப்போகிறார் ? இவர் நமது பிரச்சனையை தீர்த்து வைப்பாரா ? இவர் ஒரு வேளை காசை பிடுங்கும் ஆசாமியா ? என்று பல கேள்விகளை மனதில் வைத்துக்கொண்டு முனிவரின் வார்த்தைக்காக  காத்திருந்தார்கள். ஊர் மக்கள் அனைவரையும்  ஒரு பார்வை பார்த்து விட்டு தான் கொண்டு வந்திருந்த துணிப் பையில் இருந்து ஒரு கட்டு வெள்ளை காகிதத்தை எடுத்தார்.அந்த வெள்ளை காகிதத்தின் ஒரு மூலையில் முனிவர் தனது கைப்பட “உலகம் செழிக்கவே” என்ற வாசகத்தை எழுதி இருந்தார்.

முனிவர் கையில் உள்ள ஒரு காகிதங்களை பார்த்து அது என்ன காகிதமா இருக்கும் என்று அறிய ஊர்மக்கள் ஆவலாக  காத்திருந்தார்கள். கூட்டத்தில் அமர்ந்துள்ள ஒருவரை அழைத்து முனிவர் அந்த காகிதங்களை அவரிடம்  கொடுத்து அதை அனைவரிடமும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

காகிதத்தை வாங்கிக் கொண்ட மக்கள் அதை உற்று பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.எதற்கு இந்த காகிதம் என்று மக்கள் யோசித்து கொண்டு இருக்கும் வேளையில் முனிவர் பேச ஆரம்பித்தார். உங்களின் தண்ணீர் பிரச்சனை தீரவேண்டும் என்றால் நீங்கள் நான் சொல்வதை போல செய்யவேண்டும் அது என்னவென்றால் வரும் வெள்ளிக் கிழமை  நீங்கள் அனைவரும் இந்த காளியம்மன் கோவிலுக்கு வந்து உங்களுக்கு தெரிந்த ஆனால் உங்கள் குடும்பத்தை சேர்ந்த நபராக இல்லாத  யாரையாவது மனதில் நினைத்துக் கொண்டு அவர்கள் மிகுந்த செல்வாக்குடனும் உடல் நலத்துடனும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் பிரார்த்தனை முடிந்த பிறகு நீங்கள் யாரை நினைத்து வேண்டிக் கொண்டீர்களோ அவர்களின் பெயரை நான் குடுத்த காகிதத்தில் எழுதி அங்கு வைக்கப்பட்டிருக்கும் எனது பெட்டியில் போட்டுவிட்டு செல்லவேண்டும், நீங்கள் யாருடைய பெயரை அதில் எழுதி போடுகிறீர்களோ அவர்கள் ஒரு வாரத்தில் மிகுந்த செல்வச்செழிப்புடன் மேலும் எல்லா வளமும் பெற்று மிகப்பெரிய உன்னத நிலைக்கு சென்றுவிடுவார்கள். அத்தோடு சேர்ந்து அதே ஒரு வாரத்தில் மழை பெய்து உங்கள் ஊரின் தண்ணீர் பிரச்சனையும் தீர்ந்து விடும் என்று கூறினார்.

ஒரு வாரம் கழித்து நான் மீண்டும் திரும்ப வருவேன் என்று முனிவர் ஊர்மக்களிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ஊர் மக்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியும் மறுபக்கம் சந்தேகமும் எழுந்தது. எது என்னவோ முனிவர் சொல்வதை செய்துதானே ஆக வேண்டும் அதைத் தவிர்த்து வேறு வழி ஏதும் இல்லியே என்று முடிவெடுத்து அனைவரும் வெள்ளிக்கிழமைக்காக காத்திருந்தார்கள்.

வெள்ளிக்கிழமை வந்தது, அனைவரும் கோவிலுக்கு படை எடுத்து செல்வதுபோல் கூட்டம் கூட்டமாக சென்றார்கள். அனைவரும் காளியம்மனை வேண்டுவதற்கு கண்ணை மூடிக் கொண்டார்கள் . கண்ணை மூடி வேண்டிக் கொள்ளும் நேரத்தில் அந்த ஊரில் உள்ள யாருக்கும் அடுத்தவன் நன்றாக இருக்கவேண்டும் என்பதில் துளி கூட விருப்பம் இல்லை, மேலும் நான்  அடுத்தவனுக்காக வேண்டிக்கொள்கிறேன் என்றே வைத்து கொள்ளலாம் அதுபோல அடுத்தவன் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வானா ? என்று அனைவருக்கும் சந்தேகம் வேற பற்றிக்கொண்டது.  யாரும் யாரையும் நம்பவில்லை .எனவே அந்த ஊர் மக்களில் ஒருத்தன் கூட முனிவர் சொன்னதை போல அடுத்தவன் நன்றாக  இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே இல்லை. நான்  வேண்டிக்கொள்வதால் அடுத்தவன் முன்னேறிவிடுவான் , ஆனால் எனக்காக யாரும் வேண்டிக் கொள்ளவில்லை என்றால் நான் முன்னேற முடியாமல் போய்விடுமே, அடுத்தவன் என்னைவிட உயர்ந்து இருப்பதை என்றும் என்னால் தங்கிக் கொள்ள முடியாதே  என்று அனைவரின் யோசனையும் இவ்வாறு மட்டுமே சென்றது.தங்களுக்கு தண்ணீர் முக்கியம் என்பதை மறந்து அடுத்தவனுக்காக பிரார்த்தனை பண்ணவேண்டுமா என்ன ? என்ற கேள்வி மட்டுமே அவர்களை பற்றி இருந்தது. எனவே முனிவர் கொடுத்த  காகிதத்தில் யாருடைய பெயரையும் எழுதாமல் வெறும் வெற்று காகிதத்தை மட்டுமே அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியினுள் போட்டுவிட்டு சென்றார்கள்

ஒருவாரம் ஆனது அனைவரும் மழையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் கூடவே அவர்களின் வாழ்க்கை தரமும் உயரும் என்று நினைத்து சந்தோசபட்டார்கள் ஆனால் இரண்டுமே நடக்கவில்லை. அதனால் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்த ஊர் மக்கள் அந்த முனிவர் வரட்டும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்றும் அவர் ஒரு போலி சாமியார் என்றும் பேச ஆரம்பித்தார்கள்.முனிவர் அவர் சொன்னதை போல ஒரு வாரம் கழித்து மீண்டும் வேசபுரத்துக்கு வந்து சேர்ந்தார்.

மக்கள் அனைவரும் மிகுந்த கோபத்துடன் முனிவரை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். நீங்கள் ஒரு ஏமாற்றுகாரர் என்று முனிவரை பார்த்து வசை பாடினார்கள்.முனிவரை பார்த்து ஊர்மக்கள் கேட்காத கேள்வி இல்லை. அத்தனையும் கேட்டுக்கொண்ட முனிவர் எதுவும் பேசாமல் அவர் வைத்து சென்ற பெட்டியை திறந்து அதில் உள்ள காகிதத்தை எடுத்து அனைவரும் பார்க்கும்படி வெளியே எடுத்து வைத்தார். அந்த கூட்டத்தில் உள்ள ஒரு சிறுவனை  கூப்பிட்டு ஒவ்வொரு காகிதமாக எடுத்து படிக்கச் சொன்னார் . அந்த சிறுவன் ஒவ்வொரு காகிதமாக எடுத்து பிரித்து பார்த்தான் எந்தவொரு காகிதத்திலும் எதுவும் எழுதவில்லை என்று முனிவரை பார்த்து கூறினான். அதைக்கேட்ட ஊர்மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவரை பார்த்துக்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தார்கள்..

இந்த ஊரில் ஒருவர்க்கு கூட இன்னொரு மனிதன் நன்றாக இருக்கட்டும் என்று நினைக்கின்ற எண்ணம் இல்லையா ? என்று மிகுந்த வருத்தத்துடன் ஊர் மக்களை பார்த்து முனிவர் கேட்டார். இவ்வளவு சுய நலமும், வக்கிர புத்தியும் உள்ள உங்களை போன்ற மக்களுக்கு சேவை செய்ய எப்படி அந்த வருண பகவானுக்கு மனம் வரும். உங்களின் கேவலமான எண்ணத்தினால் தான் நீங்கள் மழை , தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறீர்கள் மேலும்   நீங்கள் எப்பொழுது உங்கள் மனதை மாற்றி அடுத்தவருக்காக பரிதாபமும்  மற்றும்  அவர்களின் முன்னேற்றத்தில் சந்தோஷமும் அடைகிறீர்களோ அன்று தான் உங்களுக்கு மழை பெய்யும் என்று முனிவர் கூறினார்.

ஊர் மக்கள் அனைவரும் முனிவரின் முன்பு வெட்கி தலை குனிந்து நின்றார்கள். நீங்கள் அனைவரும் எப்பொழுது அடுத்தவருக்காக உண்மையிலேயே நான் சொன்னதை போன்று பிரார்த்தனை செய்கிறீர்களோ அன்று தான் உங்களுக்கு மழை பெய்யும் , இல்லையென்றால் நீங்கள் இப்படித்தான் கடைசி வரை  கஷ்டப்படவேண்டும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இறுதிவரை வேசபுரத்து மக்கள் முனிவர் சொன்னதைப்போல அடுத்தவருக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளவே இல்லை. மழை இல்லாமல் ஒவ்வொருவரும் ஊரை காலி  செய்தார்களே தவிர யாரும் கடைசி வரை வேண்டிக் கொள்ளவே இல்லை. அந்த ஊரில் உள்ள கடைசி நபரும் ஊரைக் காலி செய்ய வானத்தில் இருந்து ஒரு துளி மழை பூமியை முத்தமிட்டது ,ஜோர் என்று மழை கொட்ட ஆரம்பித்தது. வேசபுரத்துக்கு  அன்றுதான் பாவ விமோட்சனம் கிடைத்தது.

———அரவிந்த் பால்பாண்டி

Leave a comment