சிறப்பு விருந்தாளி – சிட்டுக்குருவி

எனது எதிர் வீட்டுக்காரர் தனது புத்தம் புது வீட்டில் ஒரு கொய்யா , ஒரு சீத்தாப்பழம் மரம் ,ஒரு சப்போட்டா மரம் மற்றும் வெறும் பூக்களை மட்டுமே பூக்கும் அடர்ந்த இலைகளை கொண்ட மேலும் படர்ந்த நிழல் தரும் ஒரு மரம், என நான்கு வெவ்வேறு மரங்களை அவர்களின் காம்போவுண்டுக்குள் வளர்த்து வந்தார். நன்கு வளர்ந்த அந்த மரங்கள் நாளடைவில் அந்த கிராமத்தில் சுற்றித் திரியும் சிட்டு குருவிகளின் கூடாரமாக மாறிவிட்டது.

பல வருடங்கள் கழித்து சொந்த ஊரில் தங்கும் வாய்ப்பையும் மேலும் பல மாதங்களுக்கு எனது அலுவலுக பணிகளை எனது கிராமத்தில் இருந்தே நிர்வாகிக்கும் ஒரு அறிய வாய்ப்பை கொரோனா தொற்று நோய் ஏற்படுத்தி கொடுத்தது என்பது துக்கத்திலும் ஒரு சந்தோசம் என்கிற ஒரு நிலை. சிட்டுக்குருவியை அதிகமாக சின்ன வயதில் பார்த்தது, அந்த இனமே அழிந்து வருகிறது என்று அனைவரும் சொல்லிகொண்டிருக்கும் நேரத்தில் அதிகப்படியான சிட்டுக்குருவிகளை எனது வீட்டின் அருகில் மீண்டும் பார்க்க முடிந்தது எல்லையற்ற மகிழ்ச்சியை தந்தது.

ஒரு மரம் மற்றும் அதனோடு அந்த குருவிகளுக்கு உள்ள பந்தத்தை எனது வீட்டின் பால்கனியில் கோரோனோ லாக் டவுனில் நாள் முழுவதும் ரசிக்கும் நல்லதொரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. காங்கிரிட் காடாக மாறி போன கிராமத்தில் ஒரு மரம் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை காட்டுகிறது என்பதை உணர்வு பூர்வமாக உணர முடிந்தது.தினமும் இந்த குருவிகளின் விளையாட்டை, கொஞ்சலை ,சிக்கு எடுக்கும் அழகை பார்க்கவே நான் எனது பால்கனியில் நாற்காலிகளை போட்டு, அங்கையே எனது அலுவலக பணிகளை செய்து வந்தேன்.

இதை எல்லாம் வேடிக்கை பார்த்த எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி கூடவே உருவானது.. அது என்னவென்றால், நீ இந்த இயற்கைக்கு என்ன செய்தாய் என்ற கேள்வி. உடனே நாமும் மரம் நடவேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும் எனது வீட்டின் அருகே இடம் இல்லை, எனவே எதாவது பண்ணியே ஆக வேண்டும் என்று என் மனம் படபடத்தது. சரி எதிர் வீட்டுக்காரர் சிட்டு குருவிக்கு தங்க வசதியாக மரம் அமைத்து குடுத்தார்.. நாம் அதற்கு உணவும், தண்ணீரும் அளிக்கலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தேன்.

உடனே வீட்டில் உள்ள கொஞ்சம் தினையை எடுத்து எனது பால்கனியில் பராசி போட்டேன்,அதோடு ஒரு கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றி வைத்தேன். நான் எனது பால்கனியின் ஒரு ஓரத்தில் அமர்ந்து சிட்டு குருவிகள் தினையை சாப்பிட வருகிறதா என்று ஆவலுடன், சிறு குழந்தையை போல எனது வாழ்க்கையின் அத்தனை பிரச்சனைகள் மற்றும் கவலைகளை மறந்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன்.

அருகில் மரத்தில் அத்தனை குருவிகள் இருந்தாலும் ஒன்று கூட நான் வைத்த தினையை எட்டிக்கூட பார்க்கவில்லை. பல மணி நேரம் ஆகிவிட்டது எந்த முன்னேற்றமும் இல்லை. வருமோ வராதோ என்று தவித்து கொண்டிருக்கும் வேளையில் இங்கும் அங்குமாக பறந்து கொண்டிருந்த ஒரு சில குருவிகள் அந்த தினை மற்றும் தண்ணீரை இறுதியாக பார்த்து விட்டது. முதல் முறையாக சிட்டுக் குருவி எனது வீட்டின் பால்கனிக்கு வந்து அந்த தண்ணீர் ஊற்ற பட்ட கிண்ணத்தின் அருகில் சிறு தேவதையை போல வந்து நின்றது.

நமக்கு தான் இவன் இந்த உணவை போட்டானா? என்று ஒவ்வொரு முறையும் சந்தேகத்துடனும் பயத்துடன் கொத்தி,கொத்தி தின்றது. நன்கு வாழ்ந்தவன் அடுத்தவனிடம் ஒரு பிடி சோறு கேட்க எவ்வளவு கூச்சமும், சங்கோஜமும், பயமும் அடைவனோ அவ்வாறு இருந்தது அந்த குருவிகளின் பார்வை.

இத்தனை நாட்கள் இல்லாமல் ,இன்று இந்த சிட்டுக்குருவிகளை ரசிப்பதர்க்கும், அதன் மீது அன்பு காட்டுவதற்கும் என் மனதிற்கு என்ன திடீர் அக்கறை வந்தது என்று என் மனதை நானே கேள்வி கேட்டுக் கொண்டேன் . ஒரு வேலை எனது வேலைப் பளுவா? மன அழுத்தமா? இல்லை இந்த மனிதர்கள் மற்றும் சமுதாயத்தின் மீது உள்ள வெறுப்பா ? என எதுவென்று தெரியவில்லை, ஒரு வேலை இந்த கொரோனாவால் ஏற்பட்ட மன மாற்றமாக கூட இருக்கலாம், ஆனால் எதுவென்று சரியாக சொல்ல முடியவில்லை.

காலை, மதியம் ,இரவு என்று நேரம் தவறாமல் தினையை போட்டு வந்தேன்,ஆரம்பத்தில் மிக சொற்ப எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்த குருவிகளின் கூட்டம் சிறிது நாளுகளுக்கு பிறகு சற்று அதிகமானது. நான் போட்ட திணையின் உமியை இமை இமைக்கும் நேரத்திற்குள் உரித்து உள்ளே உள்ள பருப்பை தின்று தீர்த்துவிடும்.தினையை தின்று போக மீதம் உள்ள உமிகள் எங்கள் பால்கனி முழுதும் சிதறி இருக்கும், குருவிக்கு தீனி போடுறானு எனக்கு இன்னும் நாலு வேலையை அதிகப்படியா இழுத்துவைக்கிறான் , கொரோன வந்து இவனுங்க வீட்ல இருக்குறது நமக்கு தான் தலைவலி என்று ஆரம்பத்தில் என் அம்மா ஒவ்வொரு முறை பால்கனியை கூட்டும் போதும் சலித்துக்கொள்ளும். ஆனால் சிறிது காலம் கழித்து அந்த குருவிகள் என் அம்மாவையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன.

நான் என்றேனும் சற்று தாமதமாக எழுந்துகொள்ள நேரிட்டால் குருவிகள் வந்து காத்து கிடக்கும் என்று என் அம்மா எனது பால்கனியில் தினையை போட்டு விட்டு வந்துவிடும். பின் நாட்களில் எத்தனை முறை சிதறி கிடந்த திணையின் உமிகளை கூட்டி , பெருக்கி எடுத்தாலும் எந்த சலிப்பும் அடைவிதில்லை , ஏனெனில் சிட்டுக்குருவி எங்கள் வீட்டல் ஒரு அங்கமாகவும், தினமும் அதை பற்றி ஒரு முறையாவது பேசும் பேசு பொருளாக மாறியே விட்டது.

காலை சுமார் ஐந்து மணிக்கெல்லாம் கீச்சு..கீச்சு..என்று தனது நாளை மிக உற்சாக சத்தம் போட்டுக்கொண்டே ஆரம்பித்து விடுகிறது, பின்பு தனது மரத்தை விட்டு எங்கோ இறை தேடி பறந்து சென்று விடுகிறது. நமது இருப்பிடத்திற்கு அருகே ஒருவன் நமக்கு தீனி போடுகிறானே, அதற்காக காத்திருந்து சாப்பிடுவதை விட்டுபுட்டு எதற்கு ஊரெங்கும்,காடெங்கும் அலைய வேண்டும் என்று எண்ணுகிற மனித புத்தி சிறு துளி கூட அந்த குருவிகளுக்கு இல்லை.

நான் போடும் உணவு எப்பொழுதும் அங்கு நிறைந்தே இருந்தாலும் குருவிகள் அதை சுற்றியே அமர்ந்து எப்பொழுதும் தின்று கொண்டே இருப்பதில்லை, அது அதெற்கென்று ஒரு நேரத்திற்கு கூட்டமாக வருகிறது,கொஞ்சம் சாப்பிடுகிறது, பின்பு தனக்கான உணவு தேவைக்கேற்ப இருந்தாலும் கூட மீண்டும் எங்கோ இரைதேடி பறந்து விடுகிறது.அவைகள் அனைத்திருக்கும் ஒரு நேர கணக்கை வைத்திருப்பத்தை என்னால் உணர முடிந்தது. சாய்ங்காலம் சுமார் ஆறு மணிக்கு சூரியன் மறையும் நேரத்தில் அணைத்து குருவிகளும் தனது இருப்பிடமான மரத்தை தேடி வந்து விடுகிறது.

எப்படி காலையில் எழும் போது கீச்சு கீச்சு என்று அணைத்து குருவிகளும் ஒன்றாக சேர்ந்து கூச்சலிடுகிறதோ , அதே போலத்தான் மாலை மீண்டும் தனது இருப்பிடத்திற்கு வந்த பின்பும் கூச்சலிடுகிறது. ஒரு நாளை ஆரம்பிக்கும் போதும் மற்றும் முடிக்கும் போதும் மிகவும் சந்தோசமாக தன்னை வைத்துக் கொள்கிறது என்று எனக்கு உரக்கப்பட்டது.

Leave a comment